திருப்பத்தூர்: காணாமல் போனவரை குடும்பத்துடன் ஒப்படைத்தனர்
மனநலம் பாதிக்கப்பட்டு 1 ஆண்டுக்கு முன்பு காணாமல்போனவர் திருப்பத்தூரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேப்போர் அடுத்த எடத்தில் பெரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பீரான் கோயா. இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது 4-வது மகள் செஹர் பானு (வயது 38). இவருக்கு 2007-ம் ஆண்டில் காட்பாடியைச் சேர்ந்த இர்பான் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செஹர் பானுவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செஹர் பானுவை அவரது தாயார் பராமரித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே செஹர் பானு சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அவரை மீட்டு உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் மனநல மருத்துவரின் சான்றின்பேரில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செஹர் பானு குணமடைந்தநிலையில் அவரிடம் முகவரி கேட்கப்பட்டு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.