வேலூர்: மருத்துவமனையில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எல். மாங்குப்பம் பகுதியை சேர்ந்த துர்காதேவி (26) என்பவரை கடந்த 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த துர்காதேவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு (கர்ப்பப்பை) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் ரத்தப்போக்கு குறையாததால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்று (நவம்பர் 13) இரவு சிகிச்சை பலனின்றி துர்காதேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததே இளம்பெண் உயிரிழப்புக்கு காரணம் எனவும், சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவர் சியாமளா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினர்கள் ஆம்பூர் பேரணாம்பட்டு செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.