

செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக துணை முதல்வர் திடீர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக காலை முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது 4500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியின் நிலவரம், ஏரியில் நீர் இருப்பு, வெளியேற்றப்படும் நீரின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்: அனைத்து இடங்களிலும் நீர் வெளியேறச் செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. யாரும் எந்தவித அச்சமும், பயமும் பயப்படத் தேவையில்லை. மழைக்காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பு அமைச்சரை, முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் நாளை ஆய்வுக்குச் செல்வேன். அனைத்து இடங்களும் முகாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம் என தெரிவித்தார்.