பழவேற்காடு: கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

73பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த செஞ்சியம்மன் நகரில் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சமீப காலமாக செஞ்சியம்மன் நகரில் இருந்து வரும் குழந்தைகள் பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்தும், பள்ளிக்கு வராமல் பெற்றோர்களுடன் மீன்பிடிக்க செல்வதை அறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் அந்த கிராமத்திற்கு சென்று குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் பள்ளிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ஒருசில குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். பழவேற்காட்டில் இயங்கி வரும் உறவு அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருப்பாலைவனம் போலீசார் தலைமையில் கிராம மக்களிடம் நடைபெற்றது.

வறுமையை காரணம் காட்டி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க கூடாது என்றும், அனைவருக்கும் கல்வி என்பதன் நோக்கில் ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை தருகிறது என அறிவுரை வழங்கினர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரியது, அவ்வாறு செய்வது குற்றம் எனவும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி