

திருவள்ளூர்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
திருவள்ளூர் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பால சுப்பிரமணிய சாமி கோவிலில் கோபுர வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பால சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் செவ்வாய்கிழமை தினமான இன்று சஷ்டி விரதத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். இலவச தரிசனம் 50 ரூபாய் கட்டணம், 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் கோபுர வாசலில் முன்பாகவே தீபம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நெய்தீபம் ஏற்றி வழிபடும் தீபங்களை காலணிகளுடன் ஒதுக்கி தள்ளும் நிலை உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கவும் தீப அகல் விளக்குகளை முறையாக அகற்றிடவும் கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் காவல்துறையினர், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.