தஞ்சாவூர்: இளைஞர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி கே. குணசேகரன் (42) தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வந்தார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதேபோல, மார்ச் 9 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் தர்ஷனை குணசேகரன் கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த தர்ஷன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மார்ச் 10 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து குணசேகரனைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் விசாரித்து குணசேகரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1, 000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட 11 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 7 மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாகப் பணியாற்றிய அப்போதைய மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்தை (தற்போது தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்) மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் பாராட்டினர்.