புதுச்சேரி - Puducherry

குடிமை பொருள் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. ரேஷன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.  தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இலவச அரிசியும் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 ஆண்டுக்கு மேல் சம்பளம் வழங்கவில்லை. தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.  இதனால் நிலுவை சம்பளம் வழங்கி, பணி நிரந்தரம் செய்யக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் பிரேம்ஆனந்த் தலைமை வகித்திட ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.  அதே வேளையில் புதுச்சேரி அரசு அறிவித்த புயல் நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாய் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் வராததால் ஏராளமானோர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒருபுறம் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம். மறுபுறம் பொதுமக்கள் முற்றுகை. என குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் திணறியது.

வீடியோஸ்


புதுச்சேரி