புதுச்சேரி: சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் நிலத்தை வாங்குபவர்கள் விற்பவர்கள், இடத்தை முறைப்படி பத்திரப்பதிவு செய்ய இருப்பவர்கள் அனைவரும் வில்லியனூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெற வேண்டிய இடத்தில் நிரந்தர சார் பத்திர பதிவாளர் அதிகாரி இல்லாததால் அலுவலகத்திற்கு பத்திரம் பதிவு செய்ய வருகின்ற பொதுமக்கள் தொழிலதிபர்கள் ஏமாற்றங்களை மட்டுமே சந்தித்துள்ளனர். மேலும் நிரந்தர பதிவாளர் அதிகாரி இல்லாத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களில் 10 கோடி மதிப்பிலான சுமார் 150- பத்திரங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் இதனால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கிரையம் செய்ய வருகின்ற பொதுமக்கள் போதிய நேரத்தில் பத்திரத்தை பதிவு செய்ய முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வில்லியனூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் சரியான நேரத்திற்கு பத்திரம் பதிவு செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தின் எதிரே உடனடியாக நிரந்தர பத்திரப்பதிவு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.