

புதுச்சேரி: 3 ரவுடிகள் வெட்டிப் படுகொலை: 10 பேர் கைது
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பாக யார் பெரிய ரவுடி என்ற தொழில் போட்டி காரணமாக உழவர்கரை சேர்ந்த பிரபல தாதாவின் மகன் ரிஷி, பெரியார் நகர் தேவா, திடீர் நகர் ஆதி, ஆகிய மூன்று ரவுடிகளையும் மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரியகடை போலீசார் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் மற்றும் கிழக்குப் பகுதி குற்றப்பிரிவு போலீசார் தனிப்படையை அமைத்து, குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த ரெயின்போ நகரைச் சேர்ந்த சத்யா மற்றும் அவனது கூட்டாளிகளான, ரோடியார்பேட்டை, சக்திவேல், அங்கு நாயக்கர் தோப்பு சரண், வண்ணாரப்பேட்டை சஞ்சீவி, சாரம் தென்றல் நகர் வெங்கடேஷ், ஆட்டுப்பட்டி சாரதி, டி.வி. நகர் காமேஷ், ஆட்டுப்பட்டி விஷ்ணு, சோலை நகர் ரவீந்திர குமார், மற்றும் இவ்வழக்கில் ஒரு சிறுவர் உள்பட 10 பேரைக் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய செல்போன்கள், 3 வீச்சு அரிவாள்கள், இரு சக்கர வாகனங்கள், சவுக்குத் தடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள இரண்டு பேரையும் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர்.