கோவை: பெரிய நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்கள்!
பெரிய நிறுவனங்களின் பெயரில் சந்தைக்கு வரும் போலி பொருட்களை வாங்கி பொது மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்துகின்றனர். பொது மக்கள் தினசரி பயன்படுத்தும் டீ துாள், சோப்பு, துணி, மொபைல், உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன. இந்தாண்டு மட்டும், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி இரும்பு கம்பி வெட்டும் கத்திகள், போலி ஸ்டிக்கர் அச்சிட்ட லுங்கிகள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலி மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்த பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற போலியான பொருட்களை சந்தைகளில் பொது மக்கள் பார்த்தால் கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நேற்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பொது மக்கள் 94981 74395 (வாட்ஸ் அப்) மற்றும் 94981 90669 ஆகிய எண்களில் தங்களின் புகார்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.