சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி, கோவை வந்தது எதற்கு என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்வின், 40. தமிழகத்தில் தேடப்பட்டு வந்த ஏ பிளஸ் ரவுடியான இவரை, கோவை பீளமேடு கொடிசியா பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தற்போது ஆல்வின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆல்வின் மீது கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் நடந்த கொலை, திருநெல்வேலியில் நடந்த ஒரு கொலை, 4 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என, 15 வழக்குகள் உள்ளன. பல்வேறு ரவுடி கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறதுகடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வந்த ஆல்வின் தலைமறைவானார். அவர் கடந்த, 2 மாதமாக என்ன செய்து வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அவரின் மொபைல் போனில், பல்வேறு ரவுடிகள் மற்றும் சிலர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த போது, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரவுடிகள் மற்றும் புதிதாக இணைந்த ரவுடிகள் யார், யார் என போலீசார் பட்டியல் தயாரித்து வருகின்றனர். மேலும் கோவையில் இவர் யாரை தேடி வந்தார், என்ன செய்ய திட்டமிட்டிருந்தார் எனவும் இன்று விசாரித்து வருகின்றனர்.