கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர், கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த Daily View Trading என்ற நிறுவனத்தை சேர்ந்த விவேக்சேது மற்றும் விஷ்வலிங்கம் ஆகியோருடன் ஆன்லைன் மூலமாக பழக்கமானார். இவர்கள் தங்களது டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி வரும் என கூறியதை நம்பி சரவணன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். ஆரம்பத்தில் முதலீட்டிற்கான வட்டி சரியாக வந்ததைத் தொடர்ந்து சரவணன் மேலும் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வட்டி வருவது நிறுத்தப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது, விவேக்சேது மற்றும் விஷ்வலிங்கம் ஆகியோர் நிறுவனத்தை காலி செய்து விட்டது தெரியவந்தது. 2022ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு உடல்நலப் பாதிப்பு இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.