அருமனை: கழிவுகள் ஏற்றி வந்த 2 டெம்போக்கள் பறிமுதல்
கேரள மாநிலத்திலிருந்து கோழி கழிவுகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அருமனை வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று (22-ம் தேதி) இரவு அருமனை சந்திப்பு பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் கோழிக் கழிவு ஏற்றி வந்த டெம்போ ஒன்றை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டெம்போவை ஒட்டி வந்த திற்பரப்பு பகுதி சேர்ந்த மகேஷ் (24) என்பவரை கைது செய்து, டெம்போவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். டெம்போ உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் இன்று 23- ம் தேதி மதியம் அருமனை வழியாக உணவுப்பொருள் கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த கேரள பதிவை கொண்ட டெம்போ வந்தது. இதையும் அருமனை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். இது தொடர்பாக காட்டாக்கடை பகுதியை சேர்ந்த சைனு( 25), ஷின்டோ (24) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.