
தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள ஹோசூர் பகுதியிலும், கும்டாபுரம் குட்டை பகுதியிலும் 2 கும்பல்கள் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதில், ஹோசூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதேபகுதியை சேர்ந்த செந் நெஞ்சா (55) பிரபு (30), மகாதேவசாமி (35) உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் சூதாட்ட பணம் ரூ. 14, 200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, கும்டாபுரம் பகுதியில் சூதாடிய அதேபகுதியை சேர்ந்த செந்நெஞ்சப்பா (32), சிவசாமி (48), மாருசாமி (45) உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூ. 48, 510 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.