ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த 35க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றது. கடை உரிமையாளர்கள் கடையை தாண்டி பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை வரை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வந்தனர்.
இவை தவிர, பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஆங்காங்கே, பூ கடை, காலணி கடை என உரிய அனுமதி பெறாமல் ஏராளமான கடைகள் இருந்தன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக, நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல், பேருந்துகள் நிற்கும் ரேக்குகள் வழியாக செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து, மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கடைகளை முழுமையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டோர், பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்று நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பொருட்கள், ரேக்குகள் உள்ளிட்டவைகளை அகற்றி குப்பை லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர்.