சமையல் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்த தானப்பன் என்பவர் ஈரோட்டில் சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார். மணிக்கூண்டு பகுதியில் தானப்பன் சாலையோரம் தேநீர் அருந்தி கொண்டிருந்தபோது அவரின் அருகே வந்து நின்ற 3 வாலிபர்கள் தானப்பன் பேண்டில் வைத்திருந்த ரூ. 8 ஆயிரம் ரூபாயை திடீரென பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து தானப்பன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி. சி. டி. வி காட்சிகளை ஆய்வு ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த மூன்று வாலிபர்கள் தேநீர் அருந்து கொண்டிருந்த தானப்பனை சுற்றி நின்று அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 8 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார் உஷார் அடைந்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து வழிப்பறையில் ஈடுபட்ட மணிகண்டன்(26) மற்றும் விக்னேஷ்(21) ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் மது போதையில் இருந்த நிலையில் வழிப்பறியில் முதல் குற்றவாளியான சந்தோஷ்(20) என்பவரை செல்போன் சிக்னல் மூலம் ஈரோடு பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்தனர். தானப்பன் பணம் வைத்திருந்ததை அறிந்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்த டவுன் போலீசார் அவர்களை கோபி சிறையில் அடைத்தனர்.