சென்னை: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை: அமைச்சர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது, மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், "பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் தமிழகத்தில் நிலவுவதால், தமிழகத்தில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்பவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 -ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுவதுக்கும் ஒரு லட்சத்துக்கு 65 என்றால் தமிழகத்தில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.