சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, கே. கே. நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அமைந்தகரை, கிண்டி, அண்ணாசாலை, மயிலாப்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதேபோல், புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 8 செமீ மழை பதிவானது. ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, சென்னை விமானநிலையம், நந்தனத்தில் தலா 6, கிண்டி, உத்தண்டி, தரமணி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கத்தில் தலா 5 செமீ மழை பதிவானது.