நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழக அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந. க. எண். 26821/ஆர்-1/2024 நாள் 06. 11. 2024–ன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாய்க்கு வந்தவாறு செவிவழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை சுய இலாபம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தரம் தாழ்ந்த அரசியலில், கண்ணியமற்ற முறையில், மலிவாக ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிப்பதுடன், அவர் இம்மாதிரியான நடவடிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.