

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முற்றுகை
அரியலூர் மாவட்டம் செதிலவாடி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிவா, சர்வாதிகாரி, சுந்தரமூர்த்தி, மதி ஆகியோர் தமிழரசனை அவதூறாக பேசி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த தமிழரசனின் சகோதரர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டியலினத்தவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட பொது மருத்துவமனையை அரியலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் விசிகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து விசிகவினர் கலைந்து சென்றனர்.