ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் யானைகளை வன பகுதிக்கு விரட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள வனப்பகுதியை ஒட்டி ஏராளமான பட்டா நிலங்களில் மம்சாபுரம், புதுப்பட்டி,
வத்திராயிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வன விலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு விவசாய நிலங்களை அழித்து வரும் யானைகளை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தவும் காட்டுப்பன்றி, மான் காட்டெருமை போன்ற வன மிருகங்களை வரவிடாமல் தடுக்க மின்வேலி அமைத்து தர வலியுறுத்தி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் செய்பவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சரணாலயத்தில் இணை இயக்குனர் தேவராஜ் இனிவரும் காலங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டு யானைகள் உள்ளே வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.