அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(63). விவசாயம் செய்து வரும் வாசுதேவன் கடந்த மாதம் ராமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனது தோட்டத்தில் தனக்கு சொந்தமான டிராக்டரை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் வாசுதேவன் வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு நிறுத்தி இருந்த டிராக்டர் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோட்டத்தில் இருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வாசுதேவன் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து வரிசையாக அந்த டிராக்டரை எந்த பக்கம் ஒட்டிச் சென்றுள்ளனர் என்பதை கண்டறிந்து டிராக்டரை திருடி சென்ற
தென்காசி அருகே தேவிபட்டணம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி(49) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடனடியாக இருந்த தென்காசி அருகே கடையநல்லூரைச் சேர்ந்த அன்னபாண்டி(30) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் இருந்தும் ஒரு டிராக்டரை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து இந்த இரண்டு டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.