விழுப்புரம்: தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தூய்மைப் பணியாளா்களுக்கான நல வாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் சி. பழனி தலைமையில் இன்று (அக்.,10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பு, அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வாழ்வாதாரம், நல வாரியம் மூலம் வழங்கப்படும் உதவிகள் உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் பேசியது: நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரா்கள் மூலம் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் பணிக்குத் தேவையான தரமான சீருடைகள், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை தொடா்ச்சியாகவும், முறையாகவும் வழங்க வேண்டும். அரசின் நலத் திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் பெறுவதற்குத் தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்தி, பணியாளா்களின் குடும்பத்தைச் சாா்ந்தவா்கள் பயன்பெறத்தக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.