வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வசித்து வருபவர் முஹம்மத் காலித். இவர் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் இஷ்ரத் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த கடையில் சுமார் 15 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவருடைய தம்பி முஹம்மத் ஷஹேப் ஏஜென்சி கண்காணிப்பு மற்றும் பணத்தை வங்கியில் செலுத்தும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று இரவு வழக்கம் போல் 8 மணிக்கு ஏஜென்சி கடையை மூடிவிட்டு கலெக்ஷன் பணம் சுமார் 4 லட்சத்தை ஒரு கைப்பையில் போட்டு அதனை தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது பெருமாள்பேட்டை கடந்து செல்லும்போது பின் தொடர்ந்து வந்த கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த முஹம்மத் ஷஹேப் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கழுத்தில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றனர். முஹம்மத் ஷஹேப் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் சம்பவம் குறித்து நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.