வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
தினமும் 500-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி இங்குள்ள விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்ல 2 பிரிவு கட்டிடங்களுக்கும் இடையே, அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் செல்லும் வழியில் ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தற்போது அந்த பணி முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.