திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தங்கம் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள மதன்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து அப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களாக அங்குள்ள மின்கம்பம் பழுதடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதையும் மின்கம்பிகள் குடியிருப்புகள் மீது செல்வதையும் அப்பகுதி மக்கள் மின்சார துறையினருக்கு கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதி மக்கள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடன் வாழ கூடிய சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பூக்கடை வியாபாரி குமரேசன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அங்குள்ள மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க கோரி சடலத்தை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.