உளுந்தூர்பேட்டை: பைக்குகள் நேருக்கு நேர் மோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கல்சிறுநாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, (45); விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜ் குமார், (30); இருவரும் நேற்று முன்தினம் இரவு ஸ்பிளண்டர் பைக்கில் எலவனாசூர்கோட்டை நோக்கி பாலத்தின் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை ஏழுமலை ஓட்டினார். 9: 00 மணியளவில் எதிரே ரஹிமான் தக்கா பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் வெங்கடேஷ், 27; சுப்ரமணி மகன் கங்காதுரை, 28; இருவரும் வந்த பல்சர் பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார், வெங்கடேஷ், கங்கா துரை ஆகிய 3 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நள்ளிரவு 12: 00 மணிக்கு முண்டிம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜ்குமார் இறந்தார். விபத்து குறித்து எலவனா சூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.