கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களிடம் ஒருநபர் ஆணைய தலைவர் இரண்டாவது நாளாக நேற்று விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியான சம்பவத்தில்24 பேரை சி. பி. சி. ஐ. டி. , போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சாராய வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களிடம் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. இதற்காக சிறையில் இருந்து 8 பேர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு விசாரணை முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரண்டாவது நாளாக நேற்று சக்திவேல், கதிரவன், அய்யாசாமி, தெய்வீகன், சிவக்குமார், பன்ஷிலால், கவுதம்சந்த், அரிதாஸ் ஆகியோரிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் கோகுல்தாஸ் தனி, தனியாக விசாரணை நடத்தினார். இன்று (16ம் தேதி) மற்ற 8 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.