சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 45 லட்சம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 45 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணம் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. எஸ். பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 45 லட்சத்து 21ஆயிரத்து 001, 1 கிலோ 239 கிராம் தங்கம், 2 கிலோ 300 கிராம் வெள்ளி, 58 வெளிநாட்டு பணத்தாள்கள், 245 வெளிநாட்டு நாணயங்கள் வந்தது தெரியவந்தது. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 2, 29, 129 உஜ்ஜயினி ஒம் காளியம்மன் கோயிலில் ரூ. 21, 075, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 3, 167 காணிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது