திருச்சியில் கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம் பறிமுதல்

68பார்த்தது
திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆபரேஷன் அகழி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில், வாரத்துக்கு 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போலீசார் தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில்
நேற்று இரவு திருச்சி உறையூர் திருத்தாந்தோணிரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு ஒரு அறையில் இருந்த பேக்கை சோதனை இட்ட போது அதில் 32. 93லட்ச ரூபாய் ரொக்கம் இருந்தது.
இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவை ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இது தொடர்பாக அந்த அறையில் தங்கி இருந்த லால்குடியை சேர்ந்த பிரபு(வயது 25), கிருஷ்ணன்(20) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ரூ. 33 லட்சம் பிடிப்பட்டது தொடர்பாக வருமானவரித்துறையினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்ததுடன் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி