திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை மாலை 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் இந்த விமானம் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என நிா்வாகம் அறிவித்திருந்தது. இது தொடா்பான தகவல் பயணிகளுக்கு குறுந்தகவலாகவும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விமானத்தில் பயணிக்க வந்த 13 போ் விமானத்தைத் தவறவிட்டனா். இதையடுத்து விமான நிறுவனம் தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனவும், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் விமான நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டனா். அதைத் தொடா்ந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து ஏா் இந்தியா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூா் நாட்டின் விமானப் போக்குவரத்து (ஏவியேஷன்) அமைச்சகத்தின் வேண்டுகோள்படி, புதன்கிழமை விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் விமான பயணிகள் கொடுத்திருந்த கைப்பேசி எண்கள், டிராவல் எஜென்ஸி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளுக்கு முறையாக அனுப்ப்பட்டன. அதன்பேரில் பயணச்சீட்டு முன் பதிவு செய்தவா்களில் 160 போ் குறித்த நேரத்துக்கு வந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்று விட்டனா். ஆனால் 13 போ் மட்டுமே தகவல் கிடைக்காமல் தாமதமாக வந்துள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது