திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் தைத் தேர் திருவிழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். திங்கள்கிழமை தைத் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் கருவறையிலிருந்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, கோயில் கொட்டார வாயிலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உத்திர வீதிகளில் வலம் வந்து, ஆழ்வார் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி வந்தார்.
அங்கு திருமஞ்சனம் கண்டருளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலையும், பிப்.11 இல் சப்தாவர்ணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான பிப்.12 இல் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.