திருச்சி ரயில் நிலையங்களில் பண்டிகை கால கண்காணிப்பு தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ரயில் சந்திப்பு நிலையம் உள்ளிட்ட ரயில் சந்திப்பு நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சொந்த ஊருக்குச் செல்வோா் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதேபோல, திருச்சி சந்திப்பு ரயில் நிலையம், ஸ்ரீரங்கம், கோட்டை ரயில் நிலையங்களிலும் இன்று கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. திருச்சி ரயில் நிலையங்களில் தமிழக ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து திருட்டு உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பணிகளுக்காக சுழற்சி முறையில் 24 மணிநேர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். ரயில் நிலையங்களுக்குள் வரும் பயணிகள், ரயில்களில் பயணிப்போரின் உடைமைகளில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ பற்றும் பொருள்கள் இருக்கிா என மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவி உள்ளிட்டவற்றின் உதவியுடன் சோதனையிட்டு வருகின்றனா். மேலும், பயணிகளிடம் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனா்