தூத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி உடன் முள்ளக்காடு பஞ்சாயத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்படாததால் கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் கையெழுத்து இடாமல் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியுடன் முள்ளக்காடு பஞ்சாயத்தை இணைக்க அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பஞ்சாயத்து செயலாளர் ராமலட்சுமி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மணிகண்டன் தலைமையில் முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் முள்ளக்காடு பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து தொடர்ந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்ற கோரி கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்படாததை கண்டித்து கிராம மக்கள் கிராம சபை கூட்டத்திலிருந்து கையெழுத்து இடாமல் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.