

திருவள்ளூர்: வட்டாட்சியர், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மேல்முதலம்பேடு கிராமத்தில் கங்கப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதனை சுப்பிரமணி, தயாளன், சாமிநாதன் ஆகியோர் பெயரில் பாக பிரிவினை செய்ய வேண்டும். இதற்காக 2024 மார்ச் மாதம் ஜமாபந்தியில் மனு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் விவசாயிகள் ரவி, தயாளன், ஏழுமலை ஆகியோர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரியை பாகப் பிரிவினைக்காக எங்கள் குடும்பத்திற்கு உரிமையான சொத்தை சகோதரர்கள் பெயரில் பாக பிரிவினை செய்ய வேண்டும் என நேரில் தெரிவித்துள்ளனர். ஒரு பாக பிரிவுக்கு ரூ. 20 ஆயிரம் வீதம், 3 நபர்கள் பெயரில் பிரிக்க வேண்டும் என்றால் ரூ. 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வட்டாட்சியர் கூறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேறு வழியில்லாமல் நில அளவையரிடம் அன்றைய தினமே ரொக்கமாக ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளனர். முழு பணத்தையும் செலுத்தினால் தான் பாக பிரிவினை உத்தரவு நகலில் கையொப்பம் இட முடியும் என வட்டாட்சியர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் தலைமை நில அளவையர் (H.S), வங்கி கணக்கில் (கூகுள் பே), ரூ. 20 ஆயிரம் செலுத்தியுள்ளனர். அதன் பிறகு தலைமை நில அளவையர் முன்னிலையில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுள்ளார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.