சலவைத் தொழிலாளியை குத்திக் கொன்ற பெட்டிக்கடைக்காரர் கைது

1069பார்த்தது
கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கிராமம், மெயின் ரோட்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் மகன் கணேஷ்குமார் (49). பெட்டிக்கடை நடத்தி வரும் இவரிடம் இதே பகுதியில் வசிக்கும் மோகன் மகன் ராஜேந்திரன் (48) என்ற கூலித் தொழிலாளி தினமும் கணேஷ்குமாரின் பெட்டி கடைக்கு மது போதையில் வந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் இதே போல் மது போதையில் ராஜேந்திரன் வந்து கணேஷ்குமாரின் பெட்டிக்கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் தர முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறு முற்றியதால் ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கணேஷ்குமாரை குத்த முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார் தன்னை காப்பாற்றிக் கொள்ள ராஜேந்திரனிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரையே உடம்பில் பல இடங்களில் அந்த கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கும்பகோணம் தாலுகா போலீசருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து, கொலை செய்த கணேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி