தஞ்சை நகரில் முகூர்த்த நாளில் பூக்களின் விலை கடும் உயர்வு

65பார்த்தது
தஞ்சை நகரில் முகூர்த்த நாளில் பூக்களின் விலை கடும் உயர்வு
சுபமுகூர்த்த நாட்களையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, மதுரை, ஒசூர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தஞ்சை அருகே உள்ள திருக்காார்பட்டி, சுவாமிமலை, குரும்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் விற்பனைக்காக
இங்கு பூக்கள் கொண்டு வரப்படும். இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாக பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொது மக்களும் தங்கள் தேவைக்கேற்ப பூக்கள் வாங்கி செல்வர்.
முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருப்பதால் அந்த சமயங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும். தற்போது சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் நாளை (7ம் தேதி)
விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ. 450க்கு விற்பனையானது. ஆனால் நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ. 750 முதல் ரூ 1000 வரை விற்பனையானது. கனகாம்பரம் கிலோ ரூ. 1000க்கு விற்பனை செய்யப்பட்டன. இதே போல் முல்லை கிலோ ரூ. 750 முதல் ரூ. 1000, சம்பங்கி ரூ. 300, அரளி ரூ. 200, ஆப்பிள் ரோஸ் ரூ. 250க்கும் விற்பனை செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி