பூதலூரில் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் உணவு மானியத்தை வெட்டி சுருக்கிய, உரம் மற்றும் விவசாய இடுபொருளின் மானியத்தை குறைத்த, வேலையின்மை போக்க எந்த அறிவிப்பும் இல்லாத, 100 நாள் வேலைக்கான கூடுதல் நிதி ஒதுக்காத, கல்விக்கு போதுமான நிதி ஒதுக்காத, 100 நாள் வேலையில் பாசன சிறுவாய்க்கால்களை தூர்வாரும் பணி வழங்காத, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி சலுகை அளித்து மக்கள் நலனையும், தமிழகத்தையும் புறக்கணித்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் நேற்று நடந்தது. மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சோ. பாஸ்கர் தலைமை வகித்தனர் , கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலர் பாஸ்கர், பூதலூர் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பூதலூர் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் முன்னிலையில் நடைபெற்ற சாலை மறியலில் கலந்து கொண்ட 47 பெண்கள் உள்ளிட்ட 69 பேரை போலீஸார் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களை மாலை விடுதலை செய்தனர்.