சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அமைச்சர் ஆர். ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணியை கட்டமைக்கும் முக்கிய தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டெல்லி தேர்தல் முடிவு குறித்து கூறும்போது தமிழகத்தில் இருப்பது போன்று இந்தியா கூட்டணி டெல்லியில் இருந்திருந்தால் பா.ஜனதா வெற்றி பெற்றிருக்க முடியாது என்றார். அந்த அளவிற்கு தோழமை கட்சியினரை அரவணைத்து செல்லும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றார்.
கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு நலஉதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்களுக்கு தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.