ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே S. தரைக்குடி கிராமத்தில் உள்ள உமையநாயகி அம்மன் கோவில் ஆவணி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு நாளான நேற்று இரவு பெண்களின் கும்மி, கோலாட்டம், களிகம்பு நடனத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
சிறுமிகள் பட்டுப்பாவாடை, சட்டை அணிந்தும், இளம் வயது பெண்கள் பாரம்பரிய தாவணி, பாவாடை அணிந்தும் கோலாட்டம், கும்மியாட்டம், களிகம்பு நடனம் ஆடி பார்வையாளர்களை அசர வைத்தனர்.
பாரம்பரிய களிகம்பு நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும் 12 பேர் களிகம்பு நடனம் ஆடி அசத்தினர்.
இந்த நடன விழாவை பார்க்க சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.