

கந்தர்வகோட்டை : தலையில் கல்லை போட்டு ஒருவர் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் சீனிவாசன் ( எ) ராஜகோபால் (வயது51). கடந்த நான்கு வருட காலமாக ராஜகோபால் அவரது டிராக்டர் வாகனத்தின் மூலம் கந்தர்வகோட்டை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில் கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் பகுதியில் மர்ம நபர்கள் அவரது வாகனத்தை வழி மறித்து அவரைத் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளியை கைது செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மட்டங்கள் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி ராஜகோபாலின் பிரேத உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகள் ஐந்து பேர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அதில் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.