புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி பட்ஜெட்டை தாக்கலை தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதன் மீது பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி ஆகியவற்றை இணைத்து புதுச்சேரியில் முதல் முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் தேசிய சுகாதார திட்டத்தின் ஆஷா பணியாளர்களின் சம்பளம் ரூ. 10, 000-த்தில் இருந்து ரூ. 18, 000 ஆகவும், என். ஆர். எச். எம் செவிலியர்களுக்கு ரூ. 15, 000 உயர்த்தி ரூ. 26, 000 ஆகவும், சமூக பணியாளர்களுக்கு ரூ. 12, 000, மற்ற தொழில்நுட்ப பணியாளர்ளுக்கு ரூ. 10, 000 சம்பளம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும் புதுச்சேரி அரசின் லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், சட்டபேரவையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்றும், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நிறைவான நிலையில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.