நாடுமுழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடும் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றானது ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கக்கூடிய நோன்பு ஆகும். ஏழைகளின் பசியை உணரும் வகையிலும், செல்வம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரி வழங்க வேண்டும், இறைவனை இரவு பகல் பாராமல் தொழுது வணங்குவது என்ற அடிப்படையில் கடந்த 30 நாட்களாக கடும் விரதம் இருந்த இஸ்லமியர்கள் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதுபோல் புதுச்சேரியில் உள்ள குத்பா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல், சுல்தானியா பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.