தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக வேளாண்மை இயந்திரமாக்கப்பட்டு வரும் நிலையில் டிராக்டர், பவர் டில்லர் மற்றும் தேயிலை அறுவடை செய்யும் வேளாண் இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய அந்தந்த பகுதிகளில் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் பட்டறைகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உதகையில் இன்று துவக்கி வைத்தார்.
வேளாண்மையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை பராமரிப்பது தொடர்பான வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான முகாம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் வேளாண்மைக்கு பயன்படுத்தக் கூடிய பல்வேறு வகையான டிராக்டர்கள், பவர் டில்லர், தேயிலை அறுவடை செய்யும் இயந்திரங்கள், மின்மோட்டார், புல் வெட்டும் கருவிகள், சுழல் கலப்பை, மருந்து தெளிக்கும் இயந்திர கருவிகள் பராமரிக்கும் முறைகள் மற்றும் பழுது நீக்கும் முறைகள் குறித்து பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில் விவசாயிகளுடன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.