தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருகிறது: வழக்கறிஞர் பரபரப்பு பேச்சு
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நேற்று (செப்.,25) செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த இரண்டாவது குண்டாஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவரை விடுதலை செய்யச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசே சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டாஸை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்தியா முழுவதும் போடப்படுகிற குண்டாஸில் 51% தமிழகத்தில் மட்டும் போடப்படுவதாகவும் குண்டாஸ் சட்டம் தமிழகத்தில் மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் நிலையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போது சாதாரண குற்றவாளியை பிடிப்பதற்கு கூட கை கால்களை உடைத்தும் துப்பாக்கி சூடு நடத்தியும் கைது செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு போலீஸ் ஸ்டேடாக மாறி வருவதாகவும் கூறினார். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிணைகளில், பேட்டியளிக்கக்கூடாது, பேசக்கூடாது என்று எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், ஒரு சாரார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.