கோவை: நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்!
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். கனமழையின் போது இரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கும் போது அப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மழையினால் தங்களது வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் ஏதேனும் விழும் நிலையில் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் இன்று (அக்.,15) தெரிவித்துள்ளார்.