மல்லசமுத்திரம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகை தந்து பள்ளியின் பெயர் மாற்ற அரசாணையை வழங்கினார். மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரிசன் காலனி என்ற பெயரில் இருந்ததை மாற்றம் செய்ய வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைஏற்று, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மேலும், பள்ளியின் பெயர்ப் பலகையில் இருந்த அரிசன் காலனி என்ற எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தார். பெயர் மாற்றம் செய்ய மனு அளித்திருந்த ஊர் பெரியவர் கணேசன் என்பவரை பாராட்டிய அவர், இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற வழக்குரைஞர் அன்பழகனிடம் 'ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவித்தார். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற திடீரென மல்லசமுத்திரம் கிராமத்துக்கு அமைச்சர் வருகை தந்ததால், ஊர்மக்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.