தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டம்
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் தொடர்பாக தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்ட வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானதாகும். இந்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், திங்கள்கிழமை மாலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். வி. கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகள் சங்கத் தலைவர் ஜகுத்சிங் தலேவால் 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். விவசாயிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், நகல் எரிப்பு போராட்டத்தில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி பங்கேற்றனர்.