தஞ்சாவூர் மாநகராட்சி 35 ஆவது வார்டு கோரிகுளம் சுடுகாடு அருகில் விளார் சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டு கோரிகுளம் சுடுகாடு அருகில் விளார் சாலையில் கடந்த 20 நாட்களுக்கு மேல் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் வழியாக கலந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை தஞ்சாவூர் மாநகராட்சியில் கோரிக்கை வைத்தும் இதுவரை சீர் செய்யப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக சாலையை கடக்கும் போது பாதாள சாக்கடை குழிக்குள் விழும் ஆபத்து உள்ளது. மேலும் அக்குழியில் கழிவு நீர் உள்ளதால் விஷவாயு தாக்கி இறப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து 3 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். அதில், ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று நிகழாமல் மக்களின் உயிர்காக்க உடனடியாக இப்பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என இப்பகுதி வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.