திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிமுக மீது அவதூறு பரப்பியதாகவும், இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், தமிழ்ச்செல்வன், ரமேஷ் உள்ளிட்டோர், மதுரை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு தரப்பினரிடையே அமைதி ஏற்படுத்துவதையே அதிமுக விரும்புகிறது.
கட்சி மீது அவதூறு செய்யும் நோக்கத்துடன், கடந்த 5-ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள். திருமங்கலத்தில் கடந்த ஜன. 30-ம் தேதி நடந்த அமைதி கூட்டத்தில் அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில், இரு மதப் பிரிவுகளும் தங்கள் தற்போதைய வழக்கப்படி வழிபாட்டைத் தொடர்வர் என்று எடுத்த முடிவுக்கு, அதிமுக பிரதிநிதிகள் கையெழுத்திட மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளீர்கள். நீங்கள் கூறியது தவறானது. அமைதிக் கூட்டத்துக்கு அதிமுகவை அழைக்காமல் இருந்துவிட்டு, உண்மைக்குப் புறம்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டது தவறு. எனவே, அவதூறான அறிக்கையை வெளியிட்டது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். தவறினால் தங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.